பைக்கில் சென்ற ஒப்பந்ததாரருக்கு சரமாரி வெட்டு...2 பேர் கைது
6/27/2019 3:35:00 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் ஒப்பந்ததாரரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (32). இவர் சிப்காட்டில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை முடிந்து, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியே பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், மதன்குமாரின் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மதன்குமாரை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதை பார்த்ததும் மக்கள் ஓடிவந்ததால் கும்பல் ஆட்டோவில் தப்பி சென்றது. இதன்பிறகுபடுகாயம் அடைந்த மதன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில், மதன்குமாரை வெட்டியதாக கும்மிடிப்பூண்டி பைபாஸ், கரிமேடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (23), குருதீபன் (19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த குமார் (19) தேடி வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், ‘’கும்பலுக்கும் ஒப்பந்ததாரர் மதன்குமாருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடிக்கும்போது வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த முன்விரோதம் காரணமாக மதன்குமாரை வெட்டியது தெரியவந்தது. பிடிபட்ட இருவரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.