திருமணம் செய்துகொள்வதாக கூறி பேஸ்புக் தோழி பலாத்காரம்: சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
6/26/2019 4:41:45 PM
திருவனந்தபுரம்: திருமணம் செய்வதாக கூறி பேஸ்புக்கில் பழகிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தும்பா காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் சுமேஷ்லால். இவருக்கும் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்தனர். இது அவர்களுக்கு இடையே காதலாக மறியது. அதைத் தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி எஸ்ஐ சுமேஷ்லால் கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்ய சுமேஷ்லால் மறுத்துவிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் பேஸ்புக்கில்தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் அதற்கு எஸ்ஐ சுமேஷ்லால் தான் காரணம் என்றும் லைவ்வில் வந்து கூறினார். இந்த தகவல் கேரள டிஜிபி லோக்நாத்பெஹ்ராவுக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன்படி திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சுமேஷ்லால் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது துறை ரீதியான கூடுதல் நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.