போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம்: விதிமீறும் எம்பி, எம்எல்ஏவிடம் இருமடங்கு வசூல்...மத்திய அரசு அதிரடி
6/26/2019 2:42:18 PM
புதுடெல்லி: மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன மசோதாவின்படி, போக்குவரத்து விதிகளை மீறினால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால், ரூ.10,000 அபராதமும், விதிமீறும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு இருமடங்கு அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க பரிந்துரைக்கும் மோட்டார் வாகன (திருத்த) மசோதாவுக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த திருத்தப்பட்ட மசோதாவில், பழைய அபராதக் கட்டணத்தைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக வசூல் செய்வதற்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியாகிய நிலையில், அதனை மீண்டும் மத்திய அரசு புதுப்பித்திருந்தது. இந்த மசோதா 16ம் மக்களவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இருப்பினும், மாநிலங்களவை ஒப்புதல் பெறாத காரணத்தால், அது இத்தனை நாட்களாக நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த புதிய மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய விதியானது நாட்டின் தற்போதைய போக்குவரத்து முறையை மாற்றியமைக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி, போக்குவரத்து விதிமீறல்களான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், அதிகவேகமாக வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவிங், சிறுவர்கள் வாகன ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களைக் கடுமையாக கண்டிக்கும் வகையில், உச்சபட்ச அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, அவசரகால வாகனங்களுக்கு, அதாவது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்று வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றால், அந்த வாகன ஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் வரை விதிக்கப்படும். அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதிவேக பயணத்திற்கு ரூ.1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.
வாகனத்திற்கு உரிய காப்பீடு இல்லையென்றால் ரூ. 2,000 அபராதம் வசூலிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இத்துடன், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அல்லது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் இருந்தது. தற்போது புதிய மசோதாவின்படி, குடிபோதையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும். சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். போக்குவரத்து சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் தவறு ெசய்தால், இருமடங்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வாகனத்தின் பதிவும் ரத்து செய்யப்படும். அந்தவகையில், 3 சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையை காட்டிலும், பத்து மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், புதிய மசோதா விதிகளின்படி, விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்படும் மேயர், நகராட்சி சேர்மன், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் விதி மீறலில் ஈடுபட்டால், 2 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.