அமைச்சர், உதவியாளர் வீடுகளில் 2வது நாளாக சோதனை நீடிப்பு : முக்கிய ஆவணங்கள் சிக்கின
2/22/2019 2:45:17 PM
வேலூர் : 300 கோடி மதிப்புள்ள நில பேர விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.சி.வீரமணி வீடு, அவரது உதவியாளர் வீடு, தொழிலதிபர் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள், கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான வங்கி புத்தகங்கள் சிக்கி உள்ளது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாய் சிட்டி சென்டர் என்ற பெயரில் இயங்கும் 300 கோடி மதிப்பிலான நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தியும், ஜெயப்பிரகாசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் வீரமணியும் சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். 300 கோடி பண பரிவர்த்தனை முறைகேடாக பயன்படுத்துவதும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வருமான வரித்துறை தலைமை இடமான டெல்லிக்கு புகார் சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டிலும், ஜோலார்பேட்டை-நாட்றம்பள்ளி சாலையில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அமைச்சரின் 2வது மனைவி பத்மாசினி வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையை தொடங்கினர். தொடர்ந்து திருமண மண்டப கணக்காளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
6 பேர் கொண்ட மற்றொரு குழுவினர் ஜோலார்பேட்டை சோலையூர் அருகே விவசாய நிலத்தில் வசித்து வரும் அதிமுக நகர செயலாளரும், அமைச்சரின் நேர்முக உதவியாளருமான எஸ்.பி.சீனிவாசன்(45) வீட்டில் சோதனை நடத்தினர். இங்கு இன்று அதிகாலை 2 மணி வரை நடத்த சோதனையில் ஆவணங்கள், வங்கி புத்தகங்களும், ஏராளமான வீட்டுமனை பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சீனிவாசன் மற்றும் அவரது மனைவியிடமும் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகர் விவேகானந்தர் நகரை சேர்ந்த அதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான ராமமூர்த்தியின் வீட்டில் நேற்று காலை தொடங்கிய சோதனை இன்று 2வது நாளாக நடந்து வருகிறது. இவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களுடன் ஒரு குழுவினர் நேற்றிரவு புறப்பட்டு சென்றனர். இருப்பினும் மற்றொரு குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது தம்பி மோகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமூர்த்தியின் நண்பரும் தொழிலதிபருமான காட்பாடி கோபாலரத்தினம் நகரில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராமமூர்த்தியின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து இன்று காலை வரை இங்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் ரூசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சிவக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவளராகவும், ரூ.300 கோடி நில விவகாரகத்தில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. அங்கும் இன்று காலை வரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரத்தை கடந்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். காட்பாடி, வேலூர், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனைகள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து ஆணவங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. அளவுக்கு அதிகமாக பண பரிவர்த்தனை நடத்துவதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் கோடிக்கணக்கான பணபரிவர்த்தனை நடந்ததற்கான வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பணம் எப்படி வந்தது. யார் யாரிடம் பெறப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வங்கிகளுக்கு அழைத்து சென்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முறையாக அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி உள்ளார்களா? அல்லது மதிப்பீட்டை குறைத்து பணத்தை செலுத்தி உள்ளார்களா? என்பது குறித்து ஆணவங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமானவரித்துறை தணிக்கை குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை முடிந்தவுடன் இதுகுறித்து முழு விவரங்களும் சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து பத்திரிக்கை செய்தியாக அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.