கூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி
2/21/2019 2:34:59 PM
கூடுவாஞ்சேரி: ஆசிரியையிடம் செயின் பறித்து தப்பிய பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பாலு (35). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சித்ரா (28). இவர், அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு நேற்றிரவு சித்ரா வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது அவ்வழியே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர், ஆசிரியை சித்ராவை வழிமறித்தனர். இதன்பிறகு பைக்கில் இருந்து இறங்கிவந்த ஒருவன், ஆசிரியை அணிந்திருந்த 7 சவரன் சங்கிலியை பறித்தான். செயினை பிடித்துக்கொண்டு ஆசிரியை சத்தம் போட்டதால் அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஆனால் மர்ம நபர்கள், செயினுடன் பைக்கில் தப்பிவிட்டனர். இதுபற்றி கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.