காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை
2/21/2019 2:21:08 PM
திருமலை: காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகிறார். ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து ேபாட்டியிடுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பொதுசெயலாளர் பிரியங்காகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அனந்தபுரம் மாவட்டம் மடக்கசீராவில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநில தலைவர் ரகுவீராரெட்டி தலைமையில் பஸ் யாத்திரை தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 13மாவட்டங்களில் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு செல்லும் இந்த பஸ் யாத்திரை மார்ச் 3ம் தேதி காகுளம் பகுதியில் நிறைவு பெறுகிறது.
இந்த பஸ் யாத்திரை நாளை திருப்பதிக்கு வர உள்ளது. இதையொட்டி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இதையொட்டி ராகுல்காந்தி நாளை மதியம் 3மணியளவில் சிறப்பு விமானத்தில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வரப்பா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.