ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்
2/20/2019 3:43:54 PM
ெசன்னை: ஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் தொடங்க உள்ள நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 12வது தொடர் வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, மார்ச் 23ம் தேதி மாலை சென்னையில் தொடங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாயகர்களாக வலம் வரும் தோனியும், கோலியும் எதிரெதிர் அணிகளில் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், முழு போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படவில்லை . தேர்தல் அட்டவணை வெளியிட்ட பின்னர் போட்டிக்கான அட்டவணையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுெதாடர்பாக ஐபிஎல் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி தேர்தல் தேதிகளை கணக்கில் கொண்டு போட்டிகள் நடத்தப்படும். மேற்கண்ட இரண்டு வாரங்களில் 17 ஆட்டங்கள் நடைபெறும். இவை எட்டு மைதானங்களில் நடத்தப்படும். இந்த இரண்டு வாரத்தில் எல்லா அணிகளும் நான்கு போட்டிகளில் ஆடியிருக்கும். டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மட்டும் 5 போட்டிகளில் ஆடியிருக்கும். எல்லா அணிகளும் தனது சொந்த மைதானத்தில் 2 போட்டிகளிலும், மற்ற மைதானங்களில் 2 போட்டிகளிலும் ஆடவுள்ளது. டெல்லி 3 போட்டிகளில் சொந்த மைதானத்திலும், பெங்களூரு 3 போட்டிகளை வெளி மைதானத்திலும் ஆடவுள்ளது’ என்றனர்.