கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது
2/20/2019 2:52:33 PM
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 13ம் தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நஜுமோன் (20) என்பவரை கோயம்பேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அமைந்தகரையை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (26) என்ற பிரபல கஞ்சா வியாபாரியிடம் இருந்து 2 முறை கஞ்சா வாங்கி, புதுவையில் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை நஜுமோன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கஞ்சா வியாபாரி விக்கியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் விக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் தேசிங்குராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு ஆட்டோவில் சுற்றி வந்து, கஞ்சா விற்ற விக்கியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.