மணல் திருட்டை தடுத்த தாசில்தாரை கொல்ல முயற்சி: 4 பேர் கைது
9/6/2025 4:58:12 PM
திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல்நிலைய சரகம் புதுகருவாட்சி கிராமத்தில் உள்ள ஏரியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக விக்கிரவாண்டி தாசில்தாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு தாசில்தார் சுந்தர்ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நாகப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் 2 பொக்லைன் இயந்திரம் கொண்டு 6 டிராக்டர்களில் ஏரி மண் எடுத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தையும், டிராக்டர்களையும் தாசில்தார் சுந்தர்ராஜன் பறிமுதல் செய்ய முயன்றார். அப்போது அவரை பொக்லைன் இயந்திரத்தால் ஏற்றி கொல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு பொக்லைன் இயந்திரத்தையும், 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் நாகப்பன் கொடுத்த புகாரின் பேரில் புதுகருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், அவரது மகன்கள் பாலகுரு, பாலமுரளி, பாலஆனந்த் மற்றும் அரிகோவிந்தன், சக்திவேல், சங்கர், கணேசன், முருகதாஸ், ராஜேந்திரன் ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அதில் சங்கர், கணேசன், முருகதாஸ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 6 பேரை தேடி வருகின்றனர்.