செம்மரம் கடத்தியவர் கைது: 2 கார்கள் பறிமுதல்
9/6/2025 3:22:36 PM
திருமலை: திருப்பதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அலிபிரி சாலையில், முகப்பு விளக்குகள் எரியாமல் ஒரு கார் வேகமாக வனப்பகுதிக்குள் சென்றது. போலீசார், அந்த காரை கண்காணித்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து சிலர் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றினர். உடனே போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்தவுடன் அனைவரும் தப்பியோடினர். போலீசார் விரட்டி சென்றதில் கார் டிரைவர் கீழே விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. அதேபோல் ஒரு போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும், போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் பிடிபட்ட கார் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா மங்காபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுரேஷை கைது செய்தனர். மேலும் காருடன் 18 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இன்று காலை அலிபிரி சாலையில் சந்தேகப்படும்படி வந்த ஒரு காரை விரட்டிச் சென்றனர். லிங்க் பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.