கூடுவாஞ்சேரியில் பைக் திருடர்கள் கைது
9/6/2025 3:21:55 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பகுதியில் பைக் திருடர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம், மாடம்பாக்கம், ஆதனூர், தைலாவரம், வல்லாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டுக்கள் நடைபெற்றுவந்தன. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், உதவி எஸ்ஐக்கள் மகிதாஅன்னகிறிஸ்டி, தனசேகரன், தயாளன், ராமச்சந்திரன், கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூடுவாஞ்சேரி மேம்பாலம் அருகே ஆதனூர் பகுதியில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக ஒரு பைக்கில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாகவும் பேசியதால் சந்தேகம் அடைந்த அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில், தைலாவரம் பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் (31), கொளப்பாக்கத்தை சேர்ந்த பழனிதங்கம் (20) என்பதும் அவர்கள் ஓட்டிவந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 22 பைக்குகளை பறிமுதல் செய்தனர். நேற்று மாலை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.