வறட்சியால் இறந்த 23 விவசாயிகள் குடும்பங்களுக்கு கறவை மாடுகள்: அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கினர்
7/2/2025 3:21:29 PM
திருத்துறைப்பூண்டி: திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் 2016ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டும், உடல் நலம் குன்றியும் விவசாயிகள் பலர் இறந்தனர். தமிழக விவசாயிகளை காப்போம் என்ற பெயரில் ஓர் அமைப்பினை அமெரிக்க வாழ் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். இதன் சார்பில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த உளுந்து, துவரம் பருப்பு மற்றும் தானியங்கள் வழங்கியதுடன், இயற்கை விவசாய முறைகள் குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. இறந்த விவசாயிகளின் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தியதுடன், கடன் உதவிகளும் வழங்கினர்.
இந்த அமைப்பின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 23 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொருக்கை கிராமத்தில் நடந்தது. உம்பளச்சேரி இன பாரம்பரிய கால்நடை வளர்ப்போர் சங்க தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தொண்டு நிறுவன இயக்குனர்கள் ஜீவானந்தம், செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி, தமிழக விவசாயிகளை காப்போம் அமைப்பினை சேர்ந்த குமரேசன், செல்வராஜ், நீலமேகசுந்தரம், விக்னேஷ், கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.