ஆரணி அருகே வழிப்பறி சென்னையை சேர்ந்த 4 பேர் கைது
6/29/2018 4:57:54 PM
ஆரணி: ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி(25), நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(25), கூலித்தொழிலாளிகள். இவர்கள் நேற்றுமுன்தினம் ஆரணி-ஆற்காடு சாலையில் இரும்பேடு கூட்ரோடு அருகே வெளியூர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். இருவரும் தங்களது செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்கில் வந்த 4பேர் முரளி மற்றும் பலராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை செய்யாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 பைக்கில் 4பேர் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், இரும்பேடு கூட்ரோடில் முரளி மற்றும் பலராமனிடம் வழிப்பறியில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் சென்னை நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(20), கார்த்திகேயன்(20), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முரளி(20), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 2 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.