பெண்களை போட்டோ எடுத்த கர்நாடக போலீசார் சிறைபிடிப்பு
6/29/2018 4:51:41 PM
நாமக்கல்: நாமக்கல் கொசவம்பட்டி வஉசி நகருக்கு, நேற்று மாலை ஒரு கார் வந்தது. அதில் இருந்து இறங்கிய 3 பேர், அப்பகுதியில் உள்ள சில வீடுகளை, தங்களிடம் இருந்த செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அப்போது, வீடுகளில் இருந்த பெண்களையும் அவர்கள் புகைப்படம் எடுத்ததால் அங்கிருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, காரில் வந்த மூன்று பேரையும், அங்கிருந்து செல்ல முடியாதபடி தடுத்து சிறைபிடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், தாங்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்துள்ள போலீசார் என்றும், மோசடி ஆசாமிகள் சிலரை தேடி வந்திருப்பதாகவும் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாமக்கல் போலீசார், 3 பேரையும் மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின்னர், உயர் போலீஸ் அதிகாரிகள், கர்நாடக மாநில போலீசாரை தொடர்பு கொண்டு விவரம் கேட்ட போது, கர்நாடகாவில் நாமக்கல்லை சேர்ந்த சிலர் யாகம் செய்வதாக கூறி ₹5 லட்சம் மோசடி செய்ததாகவும், இது தொடர்பாக நடத்திய விசாரணையில், மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நாமக்கல்லில் காட்டியதாகவும், அவரை பிடிப்பதற்காக 3 போலீசார் நாமக்கல்லுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மோசடி செய்ததாக கூறப்படும் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.