‘டிரா’ பிளானில் செனகல் வாழ்வா சாவா போராட்டத்தில் கொலம்பியா: வெளியேறப்போவது யார்?
6/28/2018 3:57:51 PM
சமரா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள எச் பிரிவு ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் செனகல் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்கும் இடையே யார் அடுத்த சுற்றுக்கு செல்வது என கடும் போட்டி எழுந்துள்ள நிலையில் இன்றைய போட்டி சண்டைக்காட்சி போல அமைய அதிக வாய்ப்புண்டு.
முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. எச் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜப்பான், போலந்தை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் செனகல், கொலம்பியா மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றியே வேண்டாம் டிரா செய்தாலே செனகல் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். ஆனால் கொலம்பியாவிற்கு அப்படியில்லை. இன்று வாழ்வா சாவா நிலையில் இருக்கிறது. ஆகையால் செனகலை வீழ்த்த பல்வேறு யுக்திகளை கையாள உள்ளது.2002ல் நடந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய செனகல், கால் இறுதி வரை நுழைந்தது. லீக் ஆட்டங்களில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை வென்று அதிர்ச்சி அளித்தது. செனகல் அணி சடியோ மானே, காலிடுவ் கவுலிபலி ஆகியோரை நம்பி உள்ளது. தனது அணியில் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் உள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது கொலம்பியா.