செர்பியாவை பிரித்து மேய்ந்த பிரேசில்: 2-0 கோலடித்து நாக் அவுட் ரவுண்டிற்குள் நுழைந்தது
6/28/2018 3:57:33 PM
மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் 3வது குரூப் போட்டியில் நேற்று பிரேசில் மற்றும் செர்பியா அணிகள் மோதின. பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த உலகக் கோப்பையின் குரூப்- இ-யில் உள்ள பிரேசில், ஸ்விட்சர்லாந்து, செர்பியா மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் முறையே 4 இடங்களில் இருந்தன. குரூப்பின் டாப் இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்பதை முடிவெடுக்கும் கடைசி போட்டி நேற்று நடந்தது.பிரேசில் - செர்பியா ஒரு போட்டியிலும், ஸ்விஸ் - கோஸ்டா ரிக்கா மற்றொரு போட்டியிலும் மோதின. கோஸ்டாரிக்கா ஏற்கனவே வெளியேறிவிட்டதால், முதல் இடத்தை பிடிக்க மற்ற 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலே பிரேசிலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தது செர்பியா. பிரேசிலின் நெய்மர், குட்டினோ ஜோடி அட்டாக் செய்யும் போது, செர்பியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
நெய்மர் கொண்டு செல்லும் பந்தை தடுத்துக் கொண்டே இருந்த செர்பியா, ஆரம்பகட்டத்தில் பிரேசிலை கோல் அடிக்கவிடவில்லை.36வது நிமிடத்தின் போது பிரேசிலின் வீரர் குட்டினோ, ஒரு சூப்பர் பாஸ் செய்ய, அதை பாலினோ தனது கால் நுனியால் கோலுக்குள் தள்ளினார். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே, குட்டினோ தனது தனிப்பட்ட ஆட்டத்தால் எதிரணிகளை ஆட்டம் காண வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது பாதியில் 68வது நிமிடத்தின் போது, ஒரு கார்னர் கிக் வாய்ப்பில் நெய்மர் பாஸ் கொடுக்க, அதை பிரேசிலின் தியாகோ சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார்.
ஆட்டத்தின் இறுதிவரை செர்பியாவை கோல் அடிக்க விடவில்லை. இறுதியில் பிரேசில் 2-0 என அபார வெற்றி பெற்று, குரூப் இ-யில் முதலிடம் பிடித்தது.