சென்ட்ரிங் தொழிலாளி கொலை வழக்கு ராக்கெட் ராஜா ஆதரவாளர் சென்னையில் பிடிபட்டார்
6/18/2018 3:56:57 PM
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்(45). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 17ம்தேதி இரவு பழனியப்பபுரம் காட்டு பகுதியில் செந்தில் அடித்து கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த லிங்கத்துரை(50), அவரது உறவினர் ஜெகன்(32) ஆகியோர் கொன்றது தெரியவந்தது. தசராகுழு பொறுப்பாளராக இருந்த லிங்கத்துரையிடம், செந்தில் ரூ.ஆயிரம் கடனை வாங்கி திருப்பி செலுத்தாததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் லிங்கதுரையை ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெகனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஜெகன், சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜெகனை கைது செய்து நேற்று சாத்தான்குளம் அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். கைதான ஜெகன், ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர். நாடார் மக்கள் சக்தி இயக்க சாத்தான்குளம் வட்டார அமைப்பாளராகவும், வெங்கடேஷ் பண்ணையார் இளைஞரணி மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.