பள்ளிப்பட்டு அருகே துணிகரம் முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
6/18/2018 3:47:59 PM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த ஜங்காலுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (50). முன்னாள் ஊராட்சி தலைவர். இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். ஜங்காலுபள்ளியில் எத்திராஜுக்கு சொந்தமான வீட்டை அவரது மகள் பராமரித்து வருகிறார். ஆனாலும் எத்திராஜ் அடிக்கடி இங்குவந்து வீட்டை பார்த்துவிட்டு செல்வாராம். இந்நிலையில், இன்று காலை எத்திராஜின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எத்திராஜின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பொதட்டூர்பேட்டையில் உள்ள அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோனது. ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.