பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: அக்கா, தங்கை அதிரடி கைது
6/14/2018 3:25:48 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த அக்கா தங்கையை கைது செய்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் கழக்கூட்டம் விளையில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா இருப்பதாக கமிஷனர் பிரதாபுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி கழக்கூட்டம் சைபர்சிட்டி உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் போலீசார் நேற்று இரவு சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் வருவதை பார்த்ததும் வீட்டில் இருந்த வாலிபர் வெளியே ஓடிவிட்டார்.
வீட்டிற்குள் 2 பெண்கள் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டிக்கொண்டிருந்தனர். போலீசார் இருவரையும் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் வல்சலா (55), அவரது தங்கை ரேணுகா (52) என்றும், இவர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறிய பொட்டலங்களாக கட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.