மூதாட்டியை கொன்று 65 பவுன் நகை கொள்ளை: தந்தையுடன் ஆட்டோ டிரைவர் கைது
6/14/2018 3:21:04 PM
சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை மாணிக்கம்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரர். இவரது மனைவி சாந்தா (65). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களை அதே தெருவில் திருமணம் செய்துக் கொடுத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேவேந்திரர் இறந்தார். இதன்பின் சாந்தா, தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி, சாந்தாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அவரின் மகள்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மகள்களும், உறவினர்களும் வந்து பார்த்த போது, வீட்டினுள் சாந்தா இறந்து கிடந்தார். அவரது சடலம் அழுகி துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சாந்தாவின் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். அதில், கடந்த 3ம் தேதி காலையில் சாந்தாவின் வீட்டு முன் ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய நபர், சாந்தாவின் வீட்டிற்குள் செல்கிறார். சிறிது நேரத்தில் கடைக்கு சென்றிருந்த சாந்தா பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைகிறார். சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் கையில் ஒரு பையுடன் திரும்பி வெளியே வருகிறார். அவர் வந்தவுடன் ஆட்டோ அருகே மற்றொரு நபர் வந்து நிற்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து செல்கின்றனர். இச்சம்பவம் நடந்த பின், சாந்தா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால், வீட்டிற்குள் சென்ற நபர், மூதாட்டி சாந்தாவை கொலை செய்துவிட்டு, கையில் ஏதோ பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார் என்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.
இதுதொடர்பாக மூதாட்டி சாந்தாவின் மகள்களிடம் விசாரித்தனர். அப்போது தான், வீட்டில் இருந்த 65 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி, ₹2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் அந்த ஆட்டோ டிரைவர் செவ்வாய்பேட்டையை சேர்ந்த அலாவுதீன் (28), அவரது தந்தை கலீம் (58) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். உடனே இருவரையும் போலீசார் கைது செய்தனர்.