கோடை விடுமுறைக்குப்பின் இன்று அரசு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்
6/1/2025 3:20:28 PM
சென்னை: கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் அரசு பள்ளிகள் இன்று காலை திறக்கப்பட்டன. முதல் நாள் வகுப்புக்கு மாணவர்கள் உற்சாகமுடன் சென்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. அதை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு ஏப்.20ம் தேதி முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஏப்.21ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டன. விடுமுறைக்குப் பின் ஜூன் 1ம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
கடந்த ஆண்டுகளில் கோடை வெயில் காரணமாக திட்டமிட்டப்படி பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
அதேபோல் இந்தாண்டும் பள்ளிகள் திறப்பதை ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். இதற்கிடையில், ஜூன் 7ம் தேதி தான் அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் திட்டமிட்டப்படி ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பின் மாணவர்கள் இன்று முதல் நாள் வகுப்புக்கு உற்சாகமுடன் சென்றனர். முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம், குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல பள்ளிகளில் எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருந்தன.
வகுப்பறைகளில் குப்பைகள் படிந்தும், கட்டிடங்களில் தூசி படிந்தும் காணப்பட்டது. பல பள்ளிகளின் கழிவறைகள் மிகவும் மோசமாக காட்சி அளித்தது. தண்ணீர் வசதியும் சரிவர ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டனர். இன்று முதல் நாள் என்பதால் நிறைய மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்ற மாணவர்கள், திங்கள் கிழமை பள்ளிக்கு செல்லலாம் என்று விடுமுறை எடுத்து விட்டனர். அதேபோல் ஆசிரியர்களும் பலர் இன்று விடுப்பு எடுத்திருந்தனர். பள்ளிகளுக்கு அரசு வழங்கும் 14 வகை இலவசங்களில் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், புத்தகப் பை ஆகியவை இன்று வழங்கப்படுகின்றன. அதன்படி, 1, 6, 9,ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தங்கள் வழங்கப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள புத்தகங்கள் வழங்கப்படும்.
அவற்றுடன் புத்தகப் பை, நோட்டுகளும் வழங்கப்படும். சீருடையை பொறுத்தவரை, 1 முதல் 5 வகுப்பு, 6 முதல் 8ம் வகுப்பு வரை ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சீருடைகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு சில வகுப்புகளுக்கு மட்டும் சீருடைகளின் நிறம் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 9, 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு ரோஸ் நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கு வெளிர் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட பொருட்கள் கடந்த மாதம் 25ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் வந்து சேர்ந்துள்ளன. அரசுப் பள்ளிகள் தவிர தனியார் பள்ளிகளை நடத்துவோர் சில மாவட்டங்களில் 4ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவுசெய்துள்ளனர்.