ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவன் கைது
6/1/2025 3:16:22 PM
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வேலைக்கு செல்லும் மனைவியின் நடத்தையின்மீது கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றார். அவரை நேற்றிரவு சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த நல்லூர், புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் காசி-லட்சுமி ஆகியோரின் மகள் பானுபிரியா (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், அதே ஊர் காலனி பகுதியை சேர்ந்த சதீஷ் (33) என்பவரை பானுபிரியா காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களது திருமணத்தை பானுபிரியாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டின் முதல் மாடியில் பானுபிரியா தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். கீழ்தளத்தில் அவரது பெற்றோர் வசிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக சதீஷ் வேலைக்கு செல்லாமல், மது அருந்திவிட்டு போதையில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் பானுபிரியா வேலை செய்து வந்தார். இதனால் பானுபிரியாவின் நடத்தை மேல் ஊர் சுற்றி வந்த சதீஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், வேலை முடிந்து நேற்று மாலை பானுபிரியா வீடு திரும்பினார். பின்னர் முதல் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றவர், அதன்பிறகு கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் லட்சுமி, மாடிக்கு சென்று பார்த்தார். அங்கு பானுபிரியா கழுத்தை பெல்ட்டால் இறுக்கி, கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதப்பதை பார்த்து லட்சுமி அதிர்ச்சியாகி அலறி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பானுபிரியாவின் சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி சதீஷை பானுபிரியா திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின் சதீஷ் வேலைக்கு செல்லாமல், மாமனார் வீட்டிலேயே தங்கி, அவர்களிடமே மது, கஞ்சா குடிப்பதற்கு பணம் வாங்கி செலவழித்துள்ளார்.
இந்நிலையில், கணவனின் தொந்தரவு தாங்காமல் அப்பகுதியில் ஒரு கம்பெனியில் பானுபிரியா வேலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அவரது நடத்தையின்மீது சதீஷ் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இருவருக்கும் வாய்த் தகராறு முற்றவே, சதீஷ் ஆத்திரத்துடன் பானுபிரியாவின் கழுத்தை பெல்ட்டால் இறுக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, சோமங்கலம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த சதீஷை நேற்றிரவு சோமங்கலம் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.