இந்தியாவுக்கு வரும் சர்வதேச கிரிக்கெட் அணிகள் ஆப்கானிஸ்தானுடன் கட்டாயமாக விளையாட வேண்டும்: பிசிசிஐ அறிவிப்பு
6/1/2025 3:09:46 PM
காபூல்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள் இனிமேல் கட்டாயமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியிலாவது விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்து கலந்தாலோசனைக்காக சென்றுள்ள பிசிசிஐ செயலர் அமிதாப் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டுதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. டெஸ்ட் அணிக்கான அங்கீகாரத்தை பெற்று ஆப்கானிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு இருந்தது.
இந்தப் போட்டி வரும் ஜூன் மாதம் 14 ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியினை இந்திய அணியுடன் விளையாட உள்ள நிலையில் இந்தப் போட்டியில் ஆட இருக்கும் இந்திய அணி வீரர்கள் யார் யார் என்பதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமிதாப் சவுத்ரி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் நிருபர்களிடம் அமிதாப் சவுத்ரி கூறியதாவது : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று காபூல் வந்திருப்பது மிகப்பெரிய கவுரவம்.
அதேபோல், அந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பி.சி.சி.ஐ.க்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட பி.சி.சி.ஐ விரும்பவில்லை. அமைதியை வலியுறுத்தும் விதமாக இருநாடுகள் இடையேயான உறவை கிரிக்கெட் விளையாட்டு மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.ஐ.பி.எல் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்த டெஸ்ட் போட்டிகள் இருக்கும். கிரேட்டர் நொய்டா மற்றும் டேராடூன் பகுதியில் உள்ள மைதானங்களை ஆப்கானிஸ்தான் அணி சொந்த மைதானமாக பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதி அளித்ததற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கிய நிலையில் டேராடூன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கிறது.