நாகர்கோவிலில் பண ஆசை காட்டி சீரழிப்பு: கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளும் கும்பல்: வீடியோ ஆதாரங்களுடன் எஸ்.பி.யிடம் புகார்
6/1/2025 3:05:20 PM
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை விபசாரத்தில் தள்ளும் கும்பல் குறித்து புகைப்பட ஆதாரத்துடன் எஸ்.பி.யிடம், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. நாகர்கோவிலில் கோட்டார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர்களுடன் வந்து எஸ்.பி.யிடம் ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது : எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்து உள்ளார். சமீபத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினேன். இதற்காக அவளது சம்மதத்தை கேட்டேன். அவள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயதார்த்ததின் போது சகஜமாகவே இருந்தார். திருமண நாளுக்கு சில நாட்கள் இருக்கும் போது, திடீரென எனது மகள் மாயமானார். அதன் பிறகு அவள் என்னுடைய உறவுக்காரர் ஒருவரின் வீட்டில் இருப்பது எனக்கு தெரிந்தது.
நான் எனது மகளை என்னுடன் வா என அழைத்த போது, வர மறுத்தாள். நானும் இதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் வீடு வந்து சேருவாள் என எண்ணினேன். ஆனால் எனது மகளை நிரந்தரமாக என்னிடம் இருந்து பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் நடப்பது பின்னர் தான் தெரியவந்தது. நான் அவளை சந்திக்க முற்படும் போதெல்லாம் அவளை மறைத்து வைக்க தொடங்கினர். திடீரென எனது மகள், திருமணம் வேண்டாம் என்று கூறியதுடன், என்னை பற்றியே அவதூறாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னரே எனது மகளின் மனநிலை முற்றிலும் மாறி இருப்பதை நான் உணர்ந்தேன்.
அவளை சந்தித்து நடந்தவற்றை கேட்க முயற்சித்தேன். ஆனால் எனது மகளை என்னுடன் பேச விடவில்லை. அப்படியே பேச வந்தாலும் கூட முகம் தெரியாத சில நபர்கள் உடன் வருகிறார்கள். உனது மகளை விட்டு விட்டு சென்று விடு. எங்களுக்கு அவள் தேவை. நீ இடையூறாக இருந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் எனது மகளின் செல்போனை எடுத்து பார்த்தேன். அப்போது அதில் இருந்த சில வீடியோ காட்சிகள், போட்டோக்கள் என்னை அதிரவைத்தன. எந்த தாயும் காண கூடாத காட்சிகள் பல அந்த செல்போனில் உள்ளன. மேலும் அதில் உள்ள போட்ேடாக்கள், உரையாடல்களை பார்த்த பின்னரே எனது மகளை அந்த கும்பல் தவறான பாதைக்கு அழைத்து சென்று, சீரழித்து வருவது தெரியவந்தது. அந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சியில் எனது மகள் மட்டுமல்லாமல், வேறு சில இளம் பெண்ணின் புகைப்படங்களும், ஆபாச காட்சிகளும் உள்ளன.
இது தொடர்பாக நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால், உனது மகள் சட்டப்படி மேஜர். அவள் முடிவுப்படி தான் அனுமதிக்க முடியும் என கூறுகிறார்கள். என் கண் எதிரே எனது மகள் மட்டுமின்றி பல இளம் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதை தாங்கி ெகாள்ள முடியவில்லை. எனவே எனது மகளை அந்த கும்பலின் பிடியில் இருந்து மீட்டு தர வேண்டும். மேலும் பல இளம் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை விபசாரத்தில் தள்ளி வாழ்க்கையை சீரழித்து வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார். இது தொடர்பான போட்டோ ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருந்தார். இதையடுத்து இந்த மனுவை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.
அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இந்த பிரச்சினை குறித்து புகார் அளித்த பெண்ணிடம் பேசிய போது, ேமலும் பல தகவல்கள் வெளியாகின. கோட்டாரை மையமாக வைத்து செயல்படும் சில கும்பல், கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பண ஆசை காட்டி வலையில் வீழ்த்துவது வாடிக்கையாகவே இருந்து வருவதாக தெரிகிறது. விலை உயர்ந்த ஆடைகள், கை நிறைய பணம், நவ நாகரீக வாழ்க்கை என ஆசை காட்டி அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதை செல்போன் உரையாடல்கள் நிரூபித்து உள்ளன. என்.எஸ்.எஸ். கேம்ப் என கூறி விட்டு பங்களா வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள். 1 மணி நேரத்தில் உன்னை அனுப்பி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் உரையாடல்கள் உள்ளன.
எனவே இது திட்டமிட்டு மாணவிகள், இளம் பெண்களை சீரழிக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றன. பண வசதி உள்ள வாலிபர்கள் சிலருடன் நெருக்கமாக பழக வைத்து, அதை போட்ேடாவும் எடுக்க வைத்து அந்த இளம் பெண்கள், மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள். இந்த கும்பலில் அரசியல்வாதிகள் சிலரும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது மகளின் ஆபாச காட்சிகளை பார்த்து அதிர்ந்து போய், தற்போது எஸ்.பி.யிடம் அளித்துள்ள மனுவுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கூறினர்.