வங்கி ஊழியர்கள் 2ம் நாளாக ஸ்டிரைக்: பல கோடி பணப்பரிவர்த்தனை முடங்கியது
5/31/2018 4:40:18 PM
சென்னை: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் 2ம் நாளாக இன்று நடந்து வருகிறது. இதனால், கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், மத்திய அரசுத்தரப்பில் அதற்கு ெசவி சாய்க்கவில்லை. அதனால் வங்கி ஊழியர் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து டெல்லி மத்திய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 2 சதவீத அளவிற்கு ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் மத்திய அரசு துறைகளை ஒப்பிடும்போது, குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
வேலை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தவிர, ஏற்கனவே பெற்று வரும் சம்பள அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கக்கூடாது என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கூறியிருந்தன. ஆனால் மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்காத நிலையில், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அப்போது, வாராக்கடன் அதிகரித்து வருவதற்கு, வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வை தாமதப்படுத்தக்கூடாது. வாராக்கடனை வசூலிப்பது அரசின் கடமை, ஆனால் அதை விட்டுவிட்டு எங்களின் ஊதிய உயர்வில் கை வைக்கக்கூடாது என்று வங்கி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
வங்கி ஊழியர் ஸ்டிரைக்கால் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் நேற்றும், இன்றும் வங்கிகள் மூடப்பட்டிருந்தது. தமிழகத்தில் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள் உள்பட நாடு முழுவதும் 10 லட்சம் பேர் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொண்டனர். சென்னையை பொறுத்தவரை நூற்றுக்கணக்கான வங்கிக்கிளைகள் பூட்டப்பட்டிருந்தன. பல ஏடிஎம் மையங்களும் பூட்டப்பட்டு இருந்தன. இதனால், பணம் எடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதனால் செயற்கையாக ஒரு பணத்தட்டுப்பாடு உருவாகியுள்ளது. பல்வேறு பொருட்களின் விற்பனையும் குறைந்துள்ளது. வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வரும் 12ம் தேதி மீண்டும் வங்கி ஊழியர் சங்கங்களுடன் அரசுத்தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.