திருவள்ளூர்-வேலூர் மாவட்ட எல்லையில் 3 கிலோ எடை கொண்ட மரகத விநாயகர் சிலை மீட்பு? சென்னையை சேர்ந்தவரிடம் திருத்தணி போலீஸ் விசாரணை
5/31/2018 4:38:16 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் - வேலூர் மாவட்ட எல்லையில் உள்ள கிராமத்தில் தங்கி, 3 கிலோ எடை கொண்ட பச்சை நிற மரகத விநாயகர் சிலையை விற்க முயன்ற சென்னை வாலிபரை, திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே மப்பேடு கிராமம் உள்ளது. இக்கிராமம் வேலூர் மாவட்டம் கொண்டபாளையம் காவல்நிலையத்துக்கு உட்பட்டது. இங்கு வசிக்கும் சாராய வியாபாரி ராஜசேகர் (70) என்பவரது வீட்டில் பச்சை நிற மரகத விநாயகர் சிலை இருப்பதாக திருத்தணி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு எஸ்ஐக்கள் இளங்கோ, பார்த்தீபன் மற்றும் போலீசார் ஐப்பேடு கிராமத்துக்கு சென்று, சாராய வியாபாரி ராஜசேகர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அரை அடி உயரமும், 3 கிலோ எடையும் கொண்ட பச்சை நிற மரகத விநாயகர் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை விற்பதற்காக தங்கியிருந்த சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் லட்சுமணன் (34) என்பவரையும் போலீசார் பிடித்து, ஆர்.கே.பேட்டை போலீஸ் நிலையம்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் நேரில் வந்து நள்ளிரவு பிடிபட்ட சென்னை வாலிபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது வாலிபர், விநாயகர் சிலையை ஷோரூம் ஒன்றில் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கிய தாகவும், இதை மரகத விநாயகர் சிலை என கூறி ஏமாற்றி ரூ.5 லட்சத்துக்கு விற்க முயன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உண்மையில் பச்சை நிற விநாயகர் சிலை மரகத கல்லால் ஆனதா? பச்சை நிற கிரானைட் கல்லால் செய்யப்பட்டதா? எங்கேயாவது திருடி வந்து விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.