உலக கோப்பை கிரிக்கெட்: 2019 ஜூன் 16ல் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை
5/31/2018 4:12:36 PM
பாரீஸ்: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கவுண்ட்டவுனை ஐசிசி நேற்று தொடங்கியுள்ளது. இன்னும் 365 நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்கம் என தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டது ஐசிசி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி முதல் ஜூலை மாதம் 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடக்கிறது.
மேலும் கிரிக்கெட் உலகக் கோப்பையை கொண்டாடும் வகையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள வீடியோ இசை ஆல்பத்தையும் நேற்று வெளியிட்டுள்ளனர். இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரம் இப்போதே ஆரம்பமாகி விட்டது. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் கட்டண விவரங்களையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ தகவல்கள் படி லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,850 முதல் ரூ.4,600 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டுகளை www.cricketworldcup.com என்ற இணையதளத்தின் வாயிலாக பெற முடியும்.
யார் யாருடன் மோதுகிறார்கள் பட்டியல் வெளியீடு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலக கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் தகுதி பெற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடவுள்ளன. இதில் தகுதி பெறும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையமுடியும். இந்தியா தனது முதல் போட்டியில் தென்ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும் தனது பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 16ம் தேதி எதிர்கொள்கிறது. ஐபிஎல் ஆடியதும் உலக கோப்பைக்கு தயாராகும் இந்தியா இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்திக்கிறது.
இதற்கு முன் ஜூன் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது. 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டி முடிவதற்கும் அடுத்த தொடர் தொடங்குவதற்கும் இடையே வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவை என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. எனவே இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விளையாட முடியாது என பிசிசிஐ மறுத்து விட்டது. இதனால் 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்திய அணிக்கு 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்பதால், ஜூன் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி ஆட்டம் இருந்தால் அது சரியாக வராது என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இதனால், போட்டி ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர்அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது : 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம், ஜூன் 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. வழக்கமாக இந்தியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் வகையில்தான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 2-வதாக நடக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு நடந்ததைப் போன்று ரவுண்ட் ராபின் முறையில், அதாவது ஒவ்வொரு அணியும் அனைத்து அணியுடனும் ஒருமுறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்தியா பாகிஸ்தான் 2-வதாக மோதுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.