பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர் உத்தரகாண்டில் கைது
5/25/2018 3:01:44 PM
லக்னோ: உத்தரகாண்ட் மாநிலம், பித்தோரகார் பகுதியில் உள்ள திதிஹாட் என்ற இடத்தை சேர்ந்தவர், ரமேஷ் சிங் கன்யால். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தனது சகோதரர் மூலமாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரது வீட்டில் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்தார்.2015-17-ம் ஆண்டுகளில் அங்கு வேலை செய்த அவர், பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்டாக இருந்து, உளவு வேலை பார்த்தது அம்பலத்துக்கு வந்து உள்ளது.குறிப்பாக இந்திய தூதரக அதிகாரியின் வீட்டை வேவு பார்த்து உள்ளார், அவரது ‘லேப்-டாப்’பில் இருந்து ரகசிய தகவல்களை திருடி உள்ளார், தொலைபேசியை ஒட்டு கேட்டு உள்ளார். பின்னர் அந்த தகவல்களை ஐ.எஸ்.ஐ.யிடம் கொடுத்து பணம் பெற்று உள்ளார்.அங்கு இருந்து பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய பிறகும் அவர் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக செயல்பட்டு வந்து உள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் பற்றிய ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார். இதற்காக அவருக்கு ஐ.எஸ்.ஐ. ஒரு செல்போனை தந்து உள்ளது.
அதைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர், உத்தரகாண்ட் போலீஸ் படை மற்றும் ராணுவ உளவு அமைப்பினர் கூட்டு நடவடிக்கையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பாகிஸ்தான் செல்போன் கைப்பற்றப்பட்டது. அவரை லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்த தகவலை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த் குமார் நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினார். ரமேஷ் சிங் கன்யால், நிறைய கடன் உள்ளது. பணத்துக்காகத்தான் அவர் இப்படி உளவு வேலை பார்த்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்பது அவரிடம் மேல் விசாரணை நடத்தினால் தெரிய வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.