தொடரும் தென்மாவட்ட கலவரங்கள் துப்பாக்கிச்சூட்டில் பறிபோகும் அப்பாவி மக்களின் உயிர்கள்
5/23/2018 3:03:11 PM
நெல்லை: வறட்சியும் வேலைவாய்ப்பின்மையும் வாட்டும் தென்மாவட்டங்களில் கலவரங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. நேற்று நடந்த துப்பாக்கிசூடு 3வது முக்கிய சம்பவமாக அரங்கேறி உள்ளது. வறட்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை காரணமாக தென்மாவட்டங்களில் அடிக்கடி கொலைகள் நடப்பதுண்டு. அத்துடன் சாதி மோதல்கள் அடிக்கடி நடைபெறும். இதனால் ஏற்படும் கலவரங்களும் தென்மாவட்டங்களில் அதிகம். தொழிலாளர்களின், பொதுமக்களின் போராட்டங்களை அடக்க போலீசார் நடத்தும் அடக்குமுறைகளும் கலவரத்திற்கு இழுத்து செல்வதுண்டு.
இந்த நிலையில், நேற்று நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தென் மாவட்டங்களில் அரங்கேறிய 3வது முக்கிய சம்பவம் ஆகும். கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது, காவல் துறை தடியடி நடத்தினர். இதையடுத்து தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பதினேழு பேர் மரணமடைந்தனர். அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தனர்.
கடந்த 2011ம்ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் குருபூஜையின் போது பரமக்குடியில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடியும் நடத்தினர். இதில் 10ம் வகுப்பு மாணவி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய கூடங்குளம் போராட்டமும் நெல்லை மாவட்டத்தில் மாதக்கணக்கில் நடத்தப்பட்டு தடியடி உள்ளிட்ட சம்பவங்களை எதிர்கொண்டது.