தமிழக, கேரள எல்லையில் நிபா காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்
5/23/2018 3:01:18 PM
கம்பம்: கேரளாவை மிரட்டி வரும் நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க, கேரள, தமிழக எல்லை பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை நடத்துகின்றனர். கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு கடந்த 2 வாரத்தில் 18 பேர் பலியானார்கள். இதனால் கேரள எல்லையை யொட்டி உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள, தமிழக எல்லைப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து வருகின்றவர்களையும் அவர்களது வாகனங்களையும் தமிழக மருத்துக்குழுவினர் தீவிரமாக சோதனை செய்கின்றனர். வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து அடித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
தேனி மாவட்ட பகதிகளான கம்பம்மெட்டு பழைய வணிகவரி சோதனைச்சாவடி, லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கம்பம் மெட்டு பழைய வணிகவரி சோதனைச்சாவடி பகுதியில் புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலும் லோயர்-கேம்ப் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கூடலூர் சுகாதார கள மேற்பார்வையாளர் கண்ணன் தலைமையிலும் மருத்துவ குழுவினர் தீவிர சோதனை செய்கின்றனர். சித்த மருத்துவர் சிராஜூதீன் கூறும்போது, ‘’நிபா வைரஸ் 1998, 1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்தான் கண்டறியப்பட்டது. மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதன்முதலாக இந்த கிருமி ஏற்பட்டதால் நிபா என்று பெயரிடப்பட்டது.
பழந்திண்ணி வவ்வால்களின் சிறுநீரில் இருந்தும், மலத்தில் இருந்தும் உமிழ் நீரில் இருந்தும் விந்தணுவில் இருந்தும் நிபா வைரஸ் பரவுகிறது. பின்னர் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நிபா வைரஸ் கிருமி மனிதர்களின் மூளையை தாக்கி, என்செபாலிட்டிஸ் எனும் மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா பின்னர் மரணம் தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் தனியாக வைத்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்றார்.
நிபாவுக்கு 2 பேர் அட்மிட்: நிபா வைரஸ் காய்ச்சல் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிபா வைரஸ் தாக்கிய மேலும் 2 பேர் நேற்றிரவு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிபா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.