திருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் 200 பவுன் கொள்ளை 9 பேரிடம் தீவிர விசாரணை
5/23/2018 2:58:23 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு, 200 பவுன் நகைகளை கொள்ளையடித்தது மற்றும் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய காரை கடத்தியது தொடர்பாக பழைய குற்றவாளிகள் மற்றும் ஆடிட்டர் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் என 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் ராஜாஜிபுரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (69). ஆடிட்டராக உள்ளார். இவரது மனைவி ரஜிதா (60). இவர்களது மூத்த மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2வது மகன் லோகேஷ் (36) பெற்றோருடன் உள்ளார். நேற்றிரவு தம்பதியர், வீட்டின் கீழ்தளத்தில் வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு தூங்கினர். லோகேஷ், மாடியில் உள்ள படுக்கையறையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து, ரஜிதா, ராமச்சந்திரனை கத்தி முனையில் மிரட்டி கயிற்றால் கட்டிப்போட்டனர். பின்னர், பீரோவை திறந்து, அதிலிருந்த 200 பவுன் நகைகள், விலை உயர்ந்த 2 செல்போன்கள், 2 வாட்சுகள், ஒரு லட்சம் மதிப்பிலான மூக்கு கண்ணாடி மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய காரை திருடி கொண்டு தப்பி சென்றனர். சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, திருவள்ளூர் எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆடிட்டர் வீட்டில் வேலை செய்து வந்த பெண்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் என 9 பேரை பிடித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
லாட்ஜுகளில் திடீர் சோதனை: ஆடிட்டர் வீட்டில் நடந்த கொள்ளையை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில், திருவள்ளூர், மணவாளநகர், பேரம்பாக்கம், திருத்தணி உட்பட பல பகுதிகளில் உள்ள லாட்ஜுகளில் போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் அடையாள அட்டையை கேட்டு பரிசோதனை செய்தனர். பின்னர், அவர்களின் கைரேகைகளையும் போலீசார் எடுத்தனர். சரியான முகவரி மற்றும் செல்போன் எண்ணை கொடுத்துள்ளனரா என்பதையும் ஆய்வு செய்தனர். இரவு முழுவதும் முறையான ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். இதை, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பிக்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் எஸ்.பி., அறிவுறுத்தி உள்ளார்.