சவுண்ட் அதிகமாக வைத்து ஆடிய தகராறு வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலை
5/22/2018 3:21:38 PM
பெரம்பூர்: பெரம்பூரில் சவுண்ட் அதிகமாக வைத்து ஆடியவர்களை தட்டிக்கேட்ட தகராறில் வாலிபருக்கு சரமாரி அரிவாள்வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஓட்டேரி-பெரம்பூர் பேரக்ஸ் சாலை என்எம் கார்டன் 1வது தெருவை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (32). இவர், நேற்று அதே பகுதியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சினிமா பாட்டு போட்டு ஆடியுள்ளனர். இதை பார்த்த கோகுல்ராஜ், “இவ்வளவு சத்தமாக ஏன் பாட்டு போட்டு ஆடுகிறீர்கள். சவுண்டை குறையுங்கள்” என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து கோகுல்ராஜ் வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் காத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (19), வல்லரசு (20), கரிகாலன் (20) ஆகியோர் கோகுல்ராஜை மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர். மறைத்து வைத்திருந்த கத்தியாலும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கோகுல்ராஜின் கை, கழுத்து, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுல்ராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.