சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு
4/28/2018 5:13:04 PM
சென்னை: சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு நடத்தினார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு நடத்தி வருகிறார். சுமார் 2 மாதம் நடைபெற்று வரும் இந்த ஆய்வில் திமுக நிர்வாகிகள், முன்னணியினர், அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். நிர்வாகிகள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. 3 கட்டங்களாக கள ஆய்வு நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் 60க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தி முடித்துள்ளார். சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனான கள ஆய்வு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ேசகர்பாபு, வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மாலை 3 மணிக்கு சென்னை மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடை பெற்றது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
30ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் சுதர்சனம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான கள ஆய்வு நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.