குட்கா ஊழல் வழக்கு தீவிரமடைகிறது 22 அதிகாரிகள் சிக்குகின்றனர்: தயார் நிலையில் சிபிஐ
4/28/2018 5:09:58 PM
சென்னை: குட்கா ஊழல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதால், தீவிரமடைந்துள்ளது. அந்த வழக்கில் தொடர்புடைய 22 அதிகாரிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடுத்தவாரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உத்தரவு வந்தவுடன் விசாரணை நடத்துவது குறித்து சிபிஐ தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவில் வருமானம் தடைபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் குட்கா குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும் கம்ப்யூட்டரில் யாருக்கெல்லாம், எந்த தேதியில் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலும், அதில் விலாவரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த கம்பெனியின் உரிமையாளர் மாதவராவ் மற்றும் நிர்வாகப் பிரிவு பெண் ஊழியர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.குட்கா, பான்மசாலா விற்பனை செய்ய அமைச்சர், அப்போதைய சென்னை நகர போலீஸ் கமிஷனர்கள் 2 பேர், 2 இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உளவுத்துறை, சுகாதாரத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் என 22 அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது. அதோடு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும் அதிகாரிகள் சிறப்பு மாமூல் வாங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதுமே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இப்படி மாமூல் மட்டும் ரூ.44 கோடிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், மாதவராவ் கொடுத்த வாக்குமூலம் மற்றும் கம்ப்யூட்டரில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், மாமூல் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி டிஜிபி அசோக்குமாருக்கு கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்தை பெற்ற அசோக்குமார், இது குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் ஜெயலலிதாவின் கவனத்துக்கே இந்த கடிதம் கொண்டு செல்லப்படவில்லை. அதற்கு மாறாக அசோக்குமாரை கட்டாயமாக ஓய்வு பெறும்படி உத்தரவிடப்பட்டது. அவரும் கட்டாய ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து குட்கா விசாரணை குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரனையே டிஜிபியாக ஜெயலலிதா நியமித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், குட்கா விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, இது குறித்து ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.இதனால், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது. விசாரணைக்குப் பிறகு இரு நாட்களுக்கு முன் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதில் குட்கா முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறும்போது, ‘‘குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையில்தான் நாங்கள் பார்த்தோம். திங்கள்கிழமை அல்லது அடுத்த வாரத்துக்குள் நீதிமன்றத்தின் உத்தரவு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு கிடைத்து விடும். அதன்பின், அந்த உத்தரவு டெல்லியில் உள்ள சிபிஐ இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வழக்கில் டிஜிபி மீதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரிப்பார்களா? என்பது இப்போது உடனடியாக தெரியாது. இயக்குநர்தான் முடிவு எடுப்பார்.
அதன்பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கிற்கான முதல் தகவல் அறிக்கையை நாங்கள் பெற்று, தேவைப்பட்டால் வழக்கை மாற்றி அமைத்து விசாரணை நடத்துவோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் விசாரணை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். யார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் விசாரிப்போம்’’ என்றனர்.
விசாரணை அதிகாரி மாற்றம்: லஞ்ச ஒழிப்புத்துறையில் குட்கா முறைகேடு குறித்து கூடுதல் எஸ்பி ராமசுப்பிரமணியம் விசாரணை நடத்தி வந்தார். ஆனால் திடீரென்று கடந்த வாரம் அவர் அதிரடியாக மாற்றப்பட்டு, டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். சென்னையில் டி.கே.ராஜேந்திரன் கமிஷனராக இருந்தபோது, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக இருந்த வெங்கடாச்சலபதி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டு, குட்கா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.