மெட்ரோ ரயிலில் டிராவல் கார்டு டெபாசிட் தொகை 50 ஆக உயர்ந்ததால் 10 ரூபாய் டோக்கன்களை நாடி செல்லும் பயணிகள்
4/27/2018 3:52:05 PM
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது சுரங்கப்பாதையாகவும், மேம்பாலம் வழியாகவும் செயல்பட்டு வருகின்றது. கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை அதிகம்பேர் பயன்படுத்தி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு விரைவாக செல்ல இது முக்கிய பயன்பாடாக இருக்கிறது. இதனால் பயணிகளுக்கு டிராவல் கார்டு, டோக்கன் போன்ற எளிய முறைகள் அறிமுகப்படுத்தபட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டணமாக ரூ.10 முதல் ரூ.70 வரை வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பயணிகள் டிக்கெட் எடுக்கும்போது அவர்களுக்கு டிராவல் கார்டு கொடுக்கப்படும். அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக டெபாசிட் தொகையாக ரூ.10 கார்டுக்கு வசூலிக்கப்படும்.
இதை கொண்டு பயணிகள் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு பயணம் செய்யலாம். டிராவல் கார்டை மறுபடியும் ரீசார்ஜ் செய்து பயணம் செய்யலாம். பயணிகளுக்கு டிராவல் கார்டு தேவையில்லையென்றால் அதை அதற்குரிய கவுண்டரில் ஒப்படைத்து டெபாசிட் தொகையை பெற்று கொள்ளலாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.10 டிராவல் கார்டுக்கான டெபாசிட் தொகையானது ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், ஒரு டிராவல் கார்டு தயாரிக்க ரூ.63 வரை செலவாகியது. இதனால், டிராவல் கார்டு வாங்கியவர்கள் எதிர்பார்த்தபடி பயணம் செய்யாததால் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து டிராவல் கார்டு டெபாசிட் தொகை ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், டிராவல் கார்டுக்கான டெபாசிட் தொகை அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது 10 ரூபாய் டோக்கனையே அதிகம் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனுடைய தொகையும் ரூ.10 முதல் ரூ.70 வரையில் இருப்பதாலும் இதற்கு டெபாசிட் தொகை கிடையாது என்பதாலும் பொதுமக்கள் டோக்கன் முறைக்கே அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர்.
டிராவல் கார்டுக்கு 50 ரூபாய் விலை ஏற்றப்பட்ட 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் மெட்ரோ ரயில்களில் டோக்கன்களை வாங்கிகொண்டு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் குறைந்தது பயணிகளின் கூட்டமானது 27 ஆயிரம் வரையிலும், அதிகபட்சம் 31 ஆயிரம் வரையிலும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.