சிகிச்சை பெற வந்தவர்களின் கற்பை சூறையாடிய கொடூரம்: பெண்களின் ஆடைகளை கழற்றி வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்த பிரபல டாக்டர் கைது
4/27/2018 3:49:53 PM
சென்னை: மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களின் ஆடைகளை கழற்றி ரகசியமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த மயிலாப்பூர் பிரபல டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் என்ற ெபயரில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிவகுருநாதன் (64) என்பவர் டாக்டராக உள்ளார். பெண்களுக்கான சிறப்பு டாக்டர் என்பதால் அப்பகுதியில் கைராசி டாக்டர் என்று பெயர் பெற்றவர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் நெஞ்சு வலி காரணமாக டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப்போது டாக்டர் சிவகுருநாதன், இரண்டு குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி தனி அறைக்கு அந்த பெண்ணை மட்டும் அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப்பை உதவியுடன் பரிசோதனை செய்வதுபோல் நடித்துள்ளார். அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, மருத்துவரின் செயலை பார்த்து அந்த நபர் அதிர்ச்சியடைந்து வெளியே வந்துவிட்டார்.
பின்னர், வெளியே வந்த பெண்ணிடம், ‘‘உள்ளே என்ன நடந்தது’’ என்று வந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘‘அவர் மருத்துவர் போல் என்னிடம் நடந்து கொள்ளவில்லை’’ என்று கூறி கதறி அழுதுள்ளார். உடனே அந்த நபர் மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டார். அதற்கு டாக்டர், ‘‘இது வெறும் சிகிச்சை தான். இதை நீங்கள் தப்பா எடுத்துக்க கூடாது’’ என்று கிண்டலாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மருத்துவரின் செல்போனை பறித்து பார்த்த போது சிகிச்சைக்கு வந்த பல பெண்களிடம் இதுபோல தவறாக நடந்தது தெரியவந்தது. உடனே டாக்டர் அந்த செல்போனை பிடிங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து வெளியே வீசிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் டாக்டர் சிவகுருநாதனை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு இளம் பெண் உட்பட இரண்டு பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்றி சொல்லி பெண்களிடம் தவறாக நடக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து டாக்டர் சிவகுருநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் டாக்டர் சிவகுருநாதன் சிகிச்சைக்கு வரும் பெண்களின் மன நிலைப்படி அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்து தகாத முறையில் நடந்தது தெரியவந்தது. பிறகு மீண்டும் சிகிச்சைக்கு வரும் போது அந்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதுவரை எத்தனை பெண்களிடம் இதுபோல் நடந்து உள்ளாார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வந்த பெண்களை வீடியோ எடுத்து அத்துமீறிய சம்பவம் மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.