மாட்டு வண்டிகளுக்கு மணல் கொடுக்க மறுப்பு லாரிகளை சிறைபிடித்து தொழிலாளர்கள் போராட்டம்
4/27/2018 2:56:29 PM
திருவெறும்பூர்: திருச்சியில் 3 இடங்களில் மணல் குவாரி திறக்க முடிவு செய்த அரசு முதன் முதலாக திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு மணல் குவாரி திறந்தது. இங்கு அரசு கட்டுமான பணிகளுக்கு மட்டுமே மணல் அள்ளப்பட்டு வருவதாக முதலில் கூறப்பட்டது. துவக்கத்தில் குறைந்த லாரிகளே வந்த நிலையில் தற்போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மணல் அள்ளிச்சென்று ஸ்டாக் பாய்ண்ட் அமைத்து விற்கப்படுகிறது. இந்த குவாரிக்கு திருவளர்ச்சோலை வழியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் லாரிகள் சென்றுவருகிறது.
இந்நிலையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களுக்கு தனியாக மணல் குவாரி அமைத்து தரக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன் பனையக்குறிச்சியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பனையக்குறிச்சி குவாரி எதிரே சர்க்கார்பாளையத்தில் மாட்டு வண்டிகளுக்கு குவாரி திறக்கப்பட்டது. இன்று அதிகாலை வழக்கம்போல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள வழக்கமான பாதையில் வந்தனர். இந்த குவாரியில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரையே மணல் அள்ளும் நேரமாகும். நீண்ட நேரமாகியும் அனுமதி சீட்டு வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரவில்லை. இதனால் அங்கு 200க்கும் அதிகமான மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள நீண்ட நேரமாக காத்திருந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பனையகுறிச்சியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த லாரிகள், பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை லாரிகளிலும் மணல் அள்ளக்கூடாது என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.