எந்த ஸ்கோரையும் பாதுகாக்க முடியும்: குறைவான ரன்களே எடுத்தாலும் சிறப்பான பவுலிங்கால் வெல்வோம்: சன்ரைசர்ஸ் வீரர் ரஷித்கான்
4/27/2018 2:51:18 PM
ஐதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 25வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஸ் பாண்டே 54, ஷாகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்தனர். அங்கிட் ராஜ்புட் 5, முஜீப் ரகுமான் 1 விக்கெட் வீழ்த்தினர். எளிய இலக்கு என்பதால், அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட பஞ்சாப் அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வலுவான சன்ரைசர்ஸ் பந்து வீச்சு அட்டாக்கின் முன்பு, பஞ்சாப் அணியின் அதிரடி பேட்டிங் பாச்சா பலிக்கவில்லை.
19.2 ஓவர்களில் வெறும் 119 ரன்களுக்கு பஞ்சாப் ஆல் அவுட்டாக, 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வென்றது. பஞ்சாப் தரப்பில் லோகேஸ் ராகுல் 32, கிறிஸ் கெய்ல் 23 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில், ரஷித்கான் 3, சந்தீப் சர்மா, பாசில் தம்பி, ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மும்பைக்கு எதிரான தனது கடைசி போட்டியிலும் கூட சன்ரைசர்ஸ் 118 ரன்களே எடுத்திருந்தது. இந்த ரன்களை வைத்து கொண்டு, மும்பையை வெறும் 87 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி, சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. அதே பாணியில் மீண்டும் ஒரு முறை, குறைவான ஸ்கோரே எடுத்திருந்தாலும், அதை வெற்றிகரமாக பாதுகாத்து, அசத்தலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது சன்ரைசர்ஸ். இதன்மூலமாக புள்ளி பட்டியலில், சன்ரைசர்ஸ் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒரு கட்டத்தில் 7 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் என பஞ்சாப் மிக வலுவான நிலையில் இருந்தது. அப்போது பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் லோகேஸ் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடியாக விளையாட தொடங்கினர். அந்த நேரத்தில் ரஷித்கானை பந்து வீச வரவழைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. தனது முதல் ஓவரிலேயே (8வது ஓவர்) லோகேஸ் ராகுல் விக்கெட்டை ரஷித்கான் கைப்பற்றினார். அதன்பின் பஞ்சாப் அணிக்கு தொடர் வீழ்ச்சிதான். இதுகுறித்து ரஷித்கான் கூறுகையில், ‘’பாசிட்டிவ்-ஆக இருக்க வேண்டும் என்பதுதான் திட்டம். பயிற்சியாளர்கள் எனக்கு மிகுந்த ஆதரவை அளிக்கின்றனர்.
என்ஜாய் செய்து விளையாடு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். கேப்டன் விருப்பப்பட்டால், எந்த நேரத்திலும் பந்து வீச நான் தயாராகவே உள்ளேன். பவர் பிளே, மிடில் ஓவர்கள் அல்லது டெத் ஓவர்கள் என எதுவாயினும் சரி, பந்து வீச நான் எப்போதும் தயாராகவே இருப்பேன். லோகேஸ் ராகுலுக்கு பந்து வீசியதும், அவரது விக்கெட்டை கைப்பற்றியதும் ஸ்பெஷலானது. அவர் தரமான வீரர். எனக்கு பிடித்த வீரரரும் கூட.
குறைந்த ரன்களை எடுத்த போட்டிகளிலும் கூட சிறப்பாக பந்து வீசி வெற்றி பெறுவது எங்களது நம்பிக்கையை அதிகரிக்கிறது. எங்களால் எந்த ஸ்கோரையும் பாதுகாக்க முடியும். அதாவது எவ்வளவு குறைவான ரன்களை எடுத்தாலும், அந்த போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியும். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் எங்களின் பீல்டிங்கும் அபாரமாக இருந்தது. இந்த விஷயங்கள் ெதாடரும் என நம்புகிறேன்.
எங்கள் பேட்ஸ்மேன்களிடம் இருந்து இன்னும் கொஞ்சம் ரன்களை மட்டும் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.