11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கில் இன்று மாலை தீர்ப்பு: ஓபிஎஸ் பதவி தப்புமா?
4/27/2018 2:42:20 PM
சென்னை: எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு 10 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் இன்று மாலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதனால் தமிழக அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அவரை பதவி விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால், கட்சியை இரண்டாக உடைத்தார். அவருக்கு தற்போது அமைச்சராக உள்ள மா.பா.பாண்டியராஜன் மற்றும் செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், நட்ராஜ் ஆகிய 10 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்றார். மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி எடப்பாடிக்கு அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். பின்னர், தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசுமீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். இந்தநிலையில், எடப்பாடி அணியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்டார். அவருக்கு 21 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அதில் 18 எம்எல்ஏக்கள், எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். அவ்வாறு மனு கொடுத்த 18 பேரையும் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதனால் 18 பேரும், தங்களை பதவி நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்தன.
திமுக சார்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அமரேந்திர சரண் ஆகியோர் வாதிட்டனர். தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். சட்டப் பேரவை செயலாளர் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து, திமுக தரப்பிலும், தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பிலும், சட்டப் பேரவை செயலாளர் சார்பிலும் எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை மார்ச் 5ம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மொத்தம் 136 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து 135ஆக குறைந்தது. அதில் தற்போது 18 பேர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். 3 பேர் டிடிவி ஆதரவு நிலையை எடுத்துள்ளனர். மீதம் 114 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் கூட்டணியைச் சேர்ந்த தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய 3 பேரும் எடப்பாடிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். இதனால் 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உள்ளது.
அதில் 11 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டால், எடப்பாடி அரசுக்கான ஆதரவு 100ஆக குறையும். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் 98 எம்எல்ஏக்கள் உள்ளனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேர், அதிமுக கூட்டணியில் இருந்து தற்போது தனியாக செயல்படும் 3 பேர் என 104 பேர் எதிராக உள்ளனர். இதனால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும். அதேநேரத்தில், 11 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படாவிட்டால், எடப்பாடி அரசுக்கு தற்போதைய நிலையில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.
மற்ெறாரு வழக்கிலும்...
ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் வைத்ததை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கிலும் இன்று மதியம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளிக்கவுள்ளது.