காஷ்மீரில் காவல் நிலையம் மீது குண்டுவீச்சு: 3 பேர் படுகாயம்
4/27/2018 2:35:03 PM
குல்காம்: காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், 2 போலீசார் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர். குண்டு வெடித்து சிதறியதில் 2 போலீசார், பொதுமக்களில் ஒருவர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஒரு போலீஸ்காரரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேல் சிகிச்சைக்காக நகர் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், அனந்த்நாக் மாவட்டம், லஸிபால் சவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். இந்நிலையில், அங்கிருந்து தப்பியோடிய தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லையோர பகுதிகளில் ஊடுருவும் தீவிரவாதிகள், பாதுகாப்பு படை வீரர்கள் தங்கியிருக்கும் முகாம்கள், காவல் நிலையம் போன்றவற்றில் தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.