நகராட்சியில் 55 கோடி கையாடல்: மேலாளர் உட்பட 3 பேர் பணி நீக்கம்
4/25/2018 4:38:26 PM
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கடந்த 2014ம் ஆண்டு மேலாளராக பணியாற்றிய சுரேஷ், கணக்காளர் முரளிகாந்த், உதவி கணக்காளராக பணியாற்றிய குருசீனிவாசன் ஆகியோர் நகராட்சி நிதியில் முறைகேடுகள் செய்து பலகோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் நகராட்சி பொது நிதியை கையாடல் செய்தது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இதையடுத்து கணக்காளர் முரளிகாந்த், உதவி கணக்காளர் குருசீனிவாசன் ஆகியோர் கடந்த 2014ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலாளர் சுரேஷ் பணியிறக்கம் செய்யப்பட்டு தருமபுரி நகராட்சி கணக்காளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இவர்களின் முறைகேடுகள் குறித்து தணிக்கை குழு விசாரணை நடத்தி வந்தது. மேற்கண்ட 3 பேரும் நகராட்சியின் பொது நிதி, முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதி உதவி திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ஊழியர்களின் விடுமுறை நிதி, துப்புரவு தொழிலாளர்களின் பிஎப் பணம், வீட்டு வாடகைப்படி, ெதாழிலாளர்களின் காப்பீட்டுத்தொகை ஆகியவற்றில் இருந்து பல்வேறு வகையில் 55 கோடி ரூபாய் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷ், முரளிகாந்த், குருசீனிவாசன் ஆகியோரை பணிநீக்கம் செய்து நகராட்சிகளின் மண்டல நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த தகவலை வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கோபு தெரிவித்துள்ளார்.
மேலாளர், கேசியருக்கு 2 ஆண்டு சிறை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வடபாலை கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2003ம் ஆண்டு ரூ.7 லட்சத்து 96 ஆயிரம் கையாடல் செய்ததாக அச்சங்கத்தின் மேலாளர் வடபாலையை சேர்ந்த ரகுராமன், காசாளர் மேலச்சேரியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை விழுப்புரம் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை முடிந்து அளிக்கப்பட்ட தீர்ப்பில், மேலாளர் ரகுராமன், காசாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.