இளம்பெண் பலாத்கார வழக்கில் சாமியார் ஆஸ்ராம்பாபு குற்றவாளி: ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
4/25/2018 3:51:53 PM
ஜோத்பூர்: இளம் பெண் பலாத்கார வழக்கில் சாமியார் ஆஸ்ராம்பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரத்தை மாலையில் அறிவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் பதட்டம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு(75). இவருக்கு வடமாநிலங்களில் பல இடங்களில் ஆசிரம கிளைகள் உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள இவரது மற்றொரு ஆஸ்ரமத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண்(16) ஒருவர் தங்கிப் படித்து வந்தார். சாமியார் ஆஸ்ராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்தப் பெண் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
போலீசிடம் கூறிய புகாரில், கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ஜோத்பூர் ஆஸிரமத்துக்கு வரவழைத்து தன்னை ஆஸ்ராம் பாபு பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆஸ்ராம் பாபு வை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து ஆஸ்ராம் பாபு சிறையில் இருந்து வருகிறார். சாமியார் ஆஸ்ராம் பாபு, சிவா, சில்பி, சரத்,பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம்தேதி முதல் இந்த வழக்கில் வாதம் தொடங்கியது.
இதற்கிடையில் குஜராத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் சூரத்நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் தங்களை ஆஸ்ராம் பாபுவும், அவரின் மகனும் பலாத்காரம் செய்ததாக புகார் செய்தனர். அந்த வழக்கும் தனியாக நடந்து வருகிறது. இதுவரை ஆஸ்ராம் பாபு 12 முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்து அத்தனையும் நிராகரிக்கப்பட்டது. 6 முறை செசன்ஸ் நீதிமன்றமும், 3 முறை ராஜஸ்தான் ஐகோர்ட்டும், 3 முறை சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் ஐகோர்ட் மேற்பார்வையில் நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளது. பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜோத்பூரிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நாளை 25-ம் தேதியன்று தீர்ப்பு வெளியாகும் என்றும் நீதிபதி மதுசூதன் சர்மா நாளை ஜோத்பூர் சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்குவார் என நேற்று தகவல் வெளியானது.
ஆஸ்ராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இன்று தீர்ப்பு வெளியானதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்பி கே.வி.சிங் கூறுகையில், ஷாஜகான்பூரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்புகள் வழங்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 2 போலீஸார் இரவு, பகல் முழுவதும் பணியில் உள்ளனர். கூடுதலாக 5 போலீஸார் அப்பகுதியில் ரோந்துப்பணியில் உள்ளனர்’’’’ எனத் தெரிவித்தார். தீர்ப்பு வழங்குவதற்காக ஜோத்பூர் சிறையில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில், ஆசாரம் பாபுவுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஜோத்பூர், அகமதாபாத், போபால், வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள ஆஸராம் ஆசிரமத்தில் அவரது விடுதலைக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். நீதிபதி மதுசூதன் சர்மா காலை 9.30 மணிக்கே ஜோத்பூர் மத்திய சிறைக்கு வந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் இரண்டு பேர் ஏற்கனவே படுகொலை செய்யப்பட்டனர். நீதிபதி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டில் காலை 10.45 நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
இளம் பெண் பலாத்கார வழக்கில் சாமியார் ஆஸ்ராம் பாபு குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படுகிறது. சாமியார் மீது பலாத்காரம் புகார் கூறிய ெபண்ணுக்கு வயது 16. இதனால் 12 வயதுகுட்பட்ட சிறுமிகள் பலாத்கார குற்றத்துக்கு வழங்கப்படும் மரண தண்டனை ஆஸ்ராம் பாபுவுக்கு கிடைக்க வாய்ப்பில்ைல என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.