காவிரி உரிமை மீட்புக்காக 3ம் நாளாக சுட்டெரிக்கும் வெயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்: விவசாயிகள், பெண்கள் திரண்டனர்
4/9/2025 4:36:11 PM
திருச்சி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் கடந்த 7ம் தேதி மாலை திருச்சி முக்கொம்பில் தொடங்கியது. இதில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று தஞ்சை மாவட்டத்தில் 40 கிராமங்களில் பயணம் மேற்கொண்டார். 3ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தஞ்சை அடுத்த அன்னப்பன்பேட்டையில் காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றிவைத்து மு.க.ஸ்டாலின் பயணத்தை துவக்கினார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரம் பேர் பங்கேற்றுபயணம் மேற்கொண்டு உள்ளனர்.
அன்னப்பன்பேட்டையில் பயணத்தை தொடங்கும்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, கல்லூரியில் படிக்கும் தனது மகன் மணிகண்டனை அழைத்து வந்து ஸ்டாலினிடம் அறிமுகம் செய்தார். ‘மகனுக்கு 2 கண்களும் தெரியாது. அவன் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறான். அவன் உங்கள் மேல் பற்று கொண்டவன். உங்கள் கூட்டம் நடந்தால் தஞ்சைக்கு வந்து பேச்சை கேட்டு விட்டு தான் வருவான்’ என கூறினார்.
இதைக்கேட்ட ஸ்டாலின் மணிகண்டனை வாழ்த்தினார். நன்றாக படியுங்கள் என கூறினார். பின்னர் அங்கிருந்து பயணம் புறப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், திலகமிட்டும் வாழ்த்தினர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். உங்கள் பயணம் வெற்றி பெறும். மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும் என கூறினர்.
பின்னர் திட்டை கோயில் சிவாச்சாரியார் வந்து ஸ்டாலினுக்கு சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினார். காவிரி இல்லாவிட்டால் தமிழ்நாடே இல்லை. நீங்க தான் காவிரியை கொண்டு வரவேண்டும் என அவர் வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து நரியனூர் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கு மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அங்கு பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி நீர் தர மறுக்கும், மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து மோடி வரும் தினத்தில் கருப்புக்கொடி காட்ட போகிறோம். அன்றைய தினம் நீங்கள் எல்லாம் கருப்பு உடை அணிய வேண்டும், குறைந்த பட்சம் கருப்பு பேட்ஜாவது அணிய வேண்டும். வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும். செய்வீர்களா என்றார். அதற்கு அங்கு திரண்டிருந்த மக்கள் கண்டிப்பாக கருப்புக்கொடி ஏற்றுவோம் என்று கூறினர்.
தொடர்ந்து மெலட்டூர் வந்தார். அங்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஸ்டாலின் வருவதை அறிந்து கேட்டுக்கு வெளியே வந்து நின்று ஸ்டாலினை வரவேற்றனர். கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் சென்று ஸ்டாலின் பேசினார். ‘நன்றாக படியுங்கள், ஏன் வெளியே வந்து நிற்கிறீர்கள், வகுப்பு தொடங்கி விட்டதா, வகுப்பு நடக்கும்போது வெளியே போகக்கூடாது’ என்றார். அதற்கு மாணவர்கள் இன்னும் வகுப்பு ெதாடங்கவில்லை. உங்களை பார்க்க வேண்டும் என வந்தோம். வகுப்பு தொடங்கியதும் போய்விடுவோம் என்றனர். மாணவர்களுக்கு வாழ்த்து கூறிவிட்டு ஸ்டாலின் பயணத்தை தொடர்ந்தார். ஒன்பத்துவேலி, திருகருக்காவூர், இடை இருப்பு, இரும்புத்தலை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அருந்தவபுரம்ஆகிய இடங்களுக்கு சென்றார்.
சுட்டெரிக்கும் வெயிலிலும் ஒவ்வொரு கிராமத்தில் மக்கள் வெள்ளமென திரண்டு பயணத்தை வரவேற்றனர். பல கிராமங்களில் மக்கள் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். சாலையின் இருபுறங்களிலும், வீடுகளின் மாடிகளிலும் நின்று மக்கள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தனர். மீண்டும் மாலை 4 மணிக்கு அம்மாபேட்டையில் பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து செம்பியநல்லூர், அவளிவநல்லூர், குமாரமங்கலம், பெருங்குடி, அமராவதி, வெட்டாற்று பாலம், ஆலங்குடி, நார்த்தாங்குடி, நீடாமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு செல்கிறார்.
4ம் நாள்: நாளை காலை 7 மணிக்கு திருவாரூரில் 4ம் நாள் பயணத்தை தொடங்குகிறார். துர்காலயா ரோடு, பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை அம்மையப்பன், ஆனைதென்பாதி, குழிக்கரை, தேவர்கண்டநல்லூர் கமலாபுரம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
அரியலூர் பயணம்:
அரியலூர் அண்ணாசிலையில் இருந்து இன்று(திங்கள்) மாலை 2வது பயணம் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு இந்த பயணத்தை திக தலைவர் வீரமணி தொடங்கி வைக்கிறார். இதில் திமுக துணைபொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, துரைசாமி, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
தொடக்க விழா பொதுக்கூட்டம் முடிந்ததும் அண்ணாசிலையில் இருந்து தேரடி, சத்திரம், மாதாகோவில்ஆகிய இடங்களுக்கு சென்று முதல்நாள் பயணத்தை அரியலூரில் நிறைவு செய்கிறார்கள். நாளை காலை 7 மணிக்கு அரியலூரில் இருந்து துவங்கி கீழப்பழூர், திருமானூர், திருவையாறு, அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்கள். இரவில்கும்பகோணத்தில் தங்குகிறார்கள். 11ம் தேதி: 11ம் தேதி கும்பகோணத்தில் இருந்து இந்த பயணம் புறப்பட்டு திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, குத்தாலம் வழியாக மயிலாடுதுறை செல்கிறது.
அங்கு மதிய உணவு முடித்துக்கொண்டு மீண்டும் மயிலாடுதுறையில் இரந்து புறப்பட்டு தலைஞாயிறு, மணல்மேடு வழியாக கடலூர் மாவட்டம் முட்டம் சென்றடைகிறது. அங்கிருந்து காட்டுமன்னார்கோவில் சென்று இரவு தங்குகின்றனர். 12ம் தேதி: 12ம் தேதி காலை 7 மணிக்கு காட்டுமன்னார்குடியில் இருந்து புறபபட்டு லால்பேட்டை, குமராட்சி வழியாக காலை 11 மணிக்கு சிதம்பரம் சென்று ஸ்டாலின் பயணத்துடன் இணைந்து கொள்கின்றனர்.