தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது: மாஜி பிரதமர் தேவகவுடா பேட்டி
4/5/2025 4:18:44 PM
பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி விவகாரத்தில் 6 வாரத்திற்குள் முடிவு எடுக்க என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 2 மாநிலங்களும் நல்லிணக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் இதில் தமிழ்நாடு இன்னும் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் என்ன செய்தது, சுப்ரீம் கோர்ட்டு என்ன நிலையை எடுத்தது என்பது குறித்து மத்திய அரசு ஆழமாக ஆராய வேண்டும். 2 மாநிலங்களுக்கும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் கர்நாடகத்திற்கு குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்.பி., தற்கொலை செய்து கொள்வதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூறுகிறார். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டங்கள் மூலம் தமிழ்நாடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது. கர்நாடகத்தின் நலனை காக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தேவகவுடா கூறினார்.