காவிரி மேலாண்மை வாரியம் கோரி ரஜினிகாந்த் உண்ணாவிரதம்?
4/5/2025 3:25:25 PM
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தகவல் பரவியுள்ளது.
தமிழகத்தில் காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைத்து கட்சிகள், அமைப்பினர், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதனால் திருச்சி, தஞ்சாவூர் உள்பட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் உண்ணாவிரதம் இருப்பார் என தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு முன் காவிரி பிரச்னை ஏற்பட்டபோது, திரையுலகினர் அனைவரும் நெய்வேலிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத ரஜினி, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘இப்போதைய சூழலில் ரஜினி உண்ணாவிரதம் போராட்டம் எதிலும் கலந்துகொள்ளவில்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை’ என்றார்.