கோபியில் நள்ளிரவு பரபரப்பு அதிமுக பெண் எம்பியை கொல்ல முயற்சி: அரிவாளுடன் கணவர் கைது
3/30/2018 2:44:12 PM
கோபி: கோபியில் நேற்று இரவு திருப்பூர் பெண் எம்பியின் வீட்டுக்குள் அரிவாளுடன் புகுந்த கணவர், எம்பியை வெட்டி கொலை செய்ய முயன்றார். போலீசார் அவரை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் சத்யபாமா(45). அதிமுகவை சேர்ந்த இவர், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் சிறுவலூரை சேர்ந்த வாசு(50). இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சத்யவசந்த்(24) என்ற மகன் உள்ளார். கோபி யூனியன் சேர்மனாக இருந்த சத்யபாமா, எம்பி ஆனதில் இருந்தே அவருக்கும், கணவர் வாசுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வாசு சிறுவலூரிலும், சத்யபாமா கோபி ஸ்ரீநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகன் சத்யவசந்துக்கு கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வது தொடர்பாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது தொடர்பாக சத்யபாமா, அவரது தம்பி பிரபு மற்றும் உறவினர்கள் ஸ்ரீநகரில் உள்ள வீட்டில் நேற்றிரவு 10.30 மணி அளவில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். அவரது தம்பி பிரபு வீடு காம்பவுண்ட் சுவர் அருகே நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டியில் வேகமாக வந்த வாசு வண்டியை நிறுத்திவிட்டு ஆவேசமாக கீழே இறங்கினார். பின்னர் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு உங்கள் இருவரையுயும் வெட்டாமல் விடமாட்டேன் என சத்தம்போட்டவாறு கொலை வெறியுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றார். செல்போன் பேசிக் கொண்டிருந்த பிரபு வேகமாக காம்பவுண்ட் கேட் இரும்பு கதவை சாத்தியதில் நிலைகுலைந்த வாசு கீழே விழுந்தார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கீழே விழுந்து கிடந்த வாசுவை பிடித்து கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோபி போலீசார் எம்பி சத்யபாமா வீடு முன் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வாசு, கையில் அரிவாளுடன், கொலை வெறியில் வீட்டுக்குள் நுழைவது பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வாசுவை கைது செய்ததுடன், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அப்போதையை மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளராக சத்யபாமா செயல்பட்டுள்ளார். அப்போதிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, வாசுவை, எம்பி சத்யபாமாவும், அப்போதைய அதிமுக நகர செயலாளர் சையத் குடான்சா ஆகிய இருவரும் சேர்ந்து கேரளா அழைத்து சென்று தன்னை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக வாசு புகார் கூறி இருந்தார்.
மேலும் தேர்தலின் போது, செலவுக்காக தனது நண்பர், உறவினர்களிடம் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அப்பணத்தை திருப்பி கொடுக்காமல் சத்யபாமா ஏமாற்றி விட்டதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் சிறுவலூர் காவல் நிலையத்தில் வாசு புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்வதை அறிந்த வாசு, எம்பி சத்யபாமா, அவரது தம்பி பிரபு ஆகியோரை கொலை செய்யும் நோக்கில் வீடு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.