பெரியபாளையம் விடுதியில் பெண் கொலை சிசிடிவி கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை
3/26/2018 2:44:52 PM
ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணுடன் இருவர் வந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாகவும், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிவரும் விடுதி காவலாளியிடமும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரியபாளையம் பகுதியில் பயணியர் மாளிகை அருகேயுள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர். பெண்ணின் கழுத்தில் காயம் இருந்தது. மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது. பின்னர், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக, விடுதி காவலாளி வேலுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விடுதி அறையை சுத்தம் செய்துவிட்டு டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றேன். ஒரு மணி நேரம் கழித்துவந்தபோது, ஒரு பெண் சடலமாக கிடப்பதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிவருகிறார்.
இதனிடையே, கடந்த 23ம்தேதி இறந்துபோன பெண்ணுடன் ஒரு முதியவர், இவருடன் மற்றொருபெண் வந்தனர். அவர்கள், பெரியபாளையம் கோயிலுக்கு வந்ததாக கூறி என்னிடம் அறையை வாடகைக்கு எடுத்தனர். கோயிலில் தரிசனம் முடிந்ததும் 2 நாட்களில் சென்றுவிடுவோம் என்றனர். ஆனால் யாரும் அறையை காலி செய்யவில்லை. இதனிடையே, சனிக்கிழமை காலை 11 மணிக்கு அறையின் வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அறையை காலி செய்துவது குறித்து மாலையில் வந்து கேட்கலாம் என நினைத்து டீ குடிப்பதற்காக சென்றுவிட்டேன். பின்னர் மாலையில் வந்தபோது அறை கதவை தட்டினேன். வெகுநேரம் ஆகியும் திறக்காததால் உள்ளே சென்று பார்த்தேன். அங்கு பெண் இறந்துகிடந்தார். அவருடன் வந்த ஆணும் பெண்ணும் மாயமாகிவிட்டனர்” என போலீசாரிடம் காவலாளி கூறியுள்ளார்.பெரியபாளையம் பஸ் நிலையத்தில் வைத்துள்ள சிசிடிவி கேமிராவில், கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நடந்து செல்வது பதிவாகி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் காவலாளியிடம் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். பெண்ணுடன் வந்தவர்கள் யார், யார் எனவும் விசாரணை நடக்கிறது.