இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மருத்துவ மாணவி கவுரவ கொலை
3/23/2018 2:54:51 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே தாழ்ந்த ஜாதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்பியதால் பெற்ற மகளை கவுரவக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் மலப்புரம் அரீகோடு அருகே உள்ள பத்னாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகன்களும், ஆதிரா (22) என்ற மகளும் உண்டு. ஆதிரா அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து முடித்துள்ளார். படிக்கும் போது அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இதையொட்டி காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கும் சுற்றி திரிந்தனர். அதைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை இருவரும் முறைப்படி அவரவர் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். வாலிபரின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதற்கு நேர் மாறாக மாணவியின் தந்தை ராஜன் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தந்தையின் எதிர்ப்பால் ஆதிரா கவலை அடைந்தார். இருப்பினும் காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தார். ஆதிரா காதலித்த வாலிபர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதால், இவர்களது திருமணத்தில் ராஜனுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இது தொடர்பாக தந்தை-மகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டத் தொடங்கியது. ஆனாலும் திருமணத்துக்கு ராஜன் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் அரீகோடு காவல் நிலையத்துக்கு சென்றது. உடனே போலீசார் ராஜனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதாலும், ஜாதி பாகுபாடு காட்டக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை கூறினர். இதையடுத்து வேறுவழியில்லாமல் காவல் நிலையத்தில் வைத்து ராஜன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.இருப்பினும் வீட்டிற்கு சென்ற பிறகு தந்தை, மகளுக்கு இடையே மீண்டும் கடுமையாக தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று (23ம் தேதி) அந்த பகுதியில் உள்ள ேகாயிலில் வைத்து திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று மாலை மீண்டும் தந்தை- மகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த ராஜன் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஆதிராவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்தார். உடனே உறவினர்கள் மீட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆதிரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரீகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து ராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.