வீட்டில் தனியாக இருந்த அரசு ஊழியரின் மனைவி சரமாரி குத்திக்கொலை
3/20/2018 3:10:30 PM
திருமலை: திருப்பதி கே.கே. லேஅவுட்டை சேர்ந்தவர் ஜெயக்குமார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி விஜயலட்சுமி (55). நேற்று ஜெயக்குமார் வெளியே சென்றிருந்தார். விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் வீட்டிற்குள் சென்றனர். அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி, ‘யார் நீங்கள், வெளியே செல்லுங்கள்’ என்று கூறினார். ஆனால் அவர்கள் திடீரென விஜயலட்சுமியை கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.பின்னர் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். வெளியே சென்றிருந்த ஜெயக்குமார் நேற்று மாலை வீட்டுக்கு வந்தார்.
அப்போது விஜயலட்சுமி படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து திருப்பதி கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, விஜயலட்சுமியை கொலை செய்த 3 வாலிபர்கள் வீட்டை விட்டு வெளியேறி மாயமானது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.