பள்ளி ஆசிரியை படுகொலை
3/19/2018 2:41:43 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியை, இன்று காலை அருகே உள்ள காலி இடத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் கோழிகூட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜூ. இவரது மனைவி சண்முகபிரியா (40), தனியார் பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றினார். மேலும் இவர் சிறந்த தமிழ் ஆர்வலர் என்று கூறப்படுகிறது. தம்பதியினருக்கு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். மகன் மதுரையில் உள்ள கல்லூரில் படித்து வருகிறார். நேற்று இரவு சண்முகபிரியா கணவர் மற்றும் மகளுடன் வழக்கம் போல் வீட்டில் தூங்கினார். இன்று காலை 6 மணியளவில் இவர்களது வீடு அருகே உள்ள காலி இடத்தில் ரத்த வெள்ளத்தில் சண்முகபிரியா பிணமாக கிடந்தார்.
தகவலறிந்து பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சண்முகபிரியாவின் கழுத்தை நைலான் கயிறால் இறுக்கியதற்கான அடையாளங்கள் இருந்தன. மேலும் முகம் முழுவதும் ரத்தம் வழிந்திருந்தது. போலீசார் ஆசிரியையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.